ஆதார் குளறுபடி- அவதியில் மக்கள்

குடியிருப்போருக்கு அவர்களின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவரத் தரவுகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது இதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் “ஆதார்” எனும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண். வழங்கப்படுகின்றது.

உச்ச நீதிமன்றம் இந்த அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என உத்தரவு போட்டிருந்டாலும், மத்திய அரசு அதனைப் பொருட்படுத்தாமல், ஏழை மக்கள் ரேசனில் அரிசி வாங்குவதற்கு கூட ஆதார் அவசியம் எனக் கட்டாயப் படுத்தி வருகின்றது. பிறந்தகுழந்தைகளுக்கு கூட ஆதார் அவசியம் எனக் கூறிவருகின்றது.
பொது விநியோக முறை (பிடிஎஸ்) விதிகளின் படி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசாங்கத்தின் நன்மைகளை அடைய முடியும். இது சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. குழந்தைகளுக்குக் கூட ஆதார் அட்டை இருந்தால் தான் ரேசனில் அரிசி, ஆஸ்பத்திரியில் தடுப்பூசியென கடுமையான விதிகளால் மக்கள் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.

தெற்கு தில்லி சேரிப்பகுதியான ஜெகதாம்பா முகாமில் வசிக்கும் , சுனிதா மற்றும் பிரேம் குமார் உபாதியாய் ஆகியோர் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களில் உள்ள குளறுபடி காரணமாகத் தங்கள் குடும்பத்தின் ரேஷன் உரிமையை இழந்துள்ளனர். இவரின் நான்கு குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வாங்க முடியாததால், இரண்டு நபர்களுக்கான சலுகை மட்டுமே பெற முடிகின்றது.

தம் குழந்தைகளுக்கு ஆதார் பதிவிட முயன்றபோது, 12 வயதிற்கும் கீழான குழந்தைகள் பதிவுசெய்ய வசதியில்லை எனக்கூறி ஆதார் சேர்க்கை பொறுப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டதால் தாம் தற்போது ரேசன் வாங்க முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பதாகக் குமார் கண்ணீருடன் கூறினார்.

முட்டிமோதி, ஒருவழியாய் தம் நான்கு குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகள் வாங்கிவிட்டார். ஆனால், அதனை பதிவு செய்யும் தேதி முடிந்துவிட்டதெனக் கூறி ரேசன் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

அவரது குடும்பம் 5 கிலோ ரேஷன் பொருட்கள் ( ₹ 2 வீதம் 4 கிலோ கோதுமை மற்றும் ₹ 3 வீதம் ஒரு கிலோ அரிசி ) வாங்க உரிமை உள்ளது. இதனால், 4 குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் குமார் திணறி வருகின்றார். ஒரு பை தைக்கும் கடைவைத்து பிழைப்பு நடத்திவரும் குமார், இப்போது பற்றாக்குறையை சமாளிக்க பொதுச்சந்தையிலிருந்து மளிகை பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சுனிதா மற்றும் குமார் மட்டுமின்றி ஷேக் சராய் சேரியில் பல்வேறு குடும்பத்தினரும் இவ்வாறு தமது அடிப்படை உரிமைகளைக் கோர முடியாமல், ஆதார் எனும் அரக்கனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசு, ஆதார் திட்டம் மிகுந்த பலனை அளித்துள்ளதாக மார்தட்டி வருகின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு, UIDAIக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், “ ரேஷன் விநியோகத்துடன் ஆதார் இணைத்ததால், ரேசன் விநியோகத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மை வந்துள்ளது மட்டுமின்றி ரூ 14,000 கோடி பணம் சேமிக்கப் பட்டுள்ளதாக்க் கூறியுள்ளார்.

2009 இல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன் தொடக்கத்திலிருந்து நிலவி வரும் சர்ச்சைகளைப் புறக்கணித்து விட்டு, இந்திய அரசாங்கம் இப்போது ஆதார் எண்ணுடன், வருமான வரிக்குப் பயன்படும் கட்டாய நிரந்தர கணக்கு எண்களை இணைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றது.

தேசிய பாதுகாப்பு, தனிப்பட்ட உரிமை மீறியதற்காக, சமூக நலத் திட்டங்களிலிருந்து மக்களைப் புறக்கணிப்பதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக ஆதார் அட்டையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. தீர்ப்பும் மக்களுக்காகச் சாதகமாக, மத்திய அரசை எச்சரித்தும், கண்டித்தும் வந்துள்ளது. ஆனாலும், மத்திய அரசு , இரக்கமின்றி நடைமுறை படுத்திவருகின்றது.
2013 இல் உச்ச நீதிமன்றம், ஏழு இடைக்கால ஆணைகளை வெளியிட்டுள்ளது. 12 இலக்க ஆதார் எண் இல்லை என்பதால், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை மறுக்கப்பட கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதனைப் பொருட்படுத்தாது, கடந்த ஆண்டு செப்டம்பர் 12 அன்று, 2016 ஆதார் சட்டத்தை (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் ஆகியவை குறித்த இலக்கு கொண்ட சேவைகள் ) அமலாக்கியது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், இயற்றப்பட்ட சட்டத்தினால், ஒருவருக்கு அரசால் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகள் பெற ஆதார் அட்டை கட்டாய மாக்கப் பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வதற்குக் கூட ஆதார் அவசியம் என விதியை நடைமுறைபடுத்தியுள்ளது.

ஐ.ஐ.டி. தில்லியில் பொருளியல் இணைப் பேராசிரியராக இருக்கும் ரீதிகா கேரா, “ஆதார் சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டதாக ஒரு தவறான எண்ணத்தைமக்களிடன் தவறாய் உருவாக்கி வருகின்றது. உண்மையில் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என மத்திய அரசாங்கம்மீது மக்கள் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசாங்கம் ஆதார் பிரச்சினையில் ஒரு இரட்டை நிலையினை கடைபிடித்து வருவதாகச் சிவில் சமூகத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சடர்க் நாகரிக்(Satark Nagrik )மக்களாட்சி அமைப்பைச் சேர்ந்த அஞ்சலி பரத்வாஜ், “ ஆதார் சுயவிருப்பத்தின் படி பதிவுசெய்யப் படுவதாக நீதிமன்றத்தில் அரசு கூறினாலும், அரசின் எந்தச் சலுகை அல்லது உரிமையைப் பெர வேண்டுமென்றாலும் ஆதார் கட்டாயம் என அறிவுருத்துவதன் மூலம் ஒவ்வுருவரையும் ஆதார் அட்டை பெற மிரட்டி வருகிறது” எனச் சுட்டிக் காட்டினார்.

ஆதார் என்ணை விட உங்களின் கையில் உள்ள மொபைல் போன் தான் உங்களைக் கண்காணிக்கும் முக்கிய கருவி . எனவே ஆதார் கொண்டு தான் உங்களைக் கண்காணிக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை . ஆதார் மூலம், உரிய்வர்க்கு சலுகை சென்று சேர வழிவகை செய்யப் பட்டுள்ளது என UIDAI தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.

மொபைல் போன் தான் கண்காணிப்பு சாதன என்றால்,, மொபைல் எண் மட்டும் பெற்றுக்கொண்டு அரசு சலுகைகளைத் தரவேண்டியது தானே எனும் சாமானியர்களின் கேள்வி குளிரூட்டப் பட்ட அறையினுள் அமர்ந்துக் கொண்டு திட்டங்களைத் தீட்டும் அதிகாரிகளுக்கோ, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ஓட்டு வாங்க மக்களைச் சந்திக்கும் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எட்டாது.
ஆதார் அட்டையில் ஆண் என்பதற்கு பதில் பெண் என இருப்பதாலும், பெயர் தவறாகப் பதிவான தாலும், பிறந்த தேதி மாறி இருப்பதாலும் எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தினமும், பல்லாயிரக்கணக்கான மக்கள் , ரேசனில், அரிசி வாங்க முடியாமல், அரசின் கல்வி உதவித்தொகை கிடைத்தும் வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் எனக் கண்ணீரும் கதறி வருகின்றனர்.


English Summary
AADHAR ,a 12 digit number given Unique Identification Authority of India (UIDAI) has been mandatory for availing government's benefits. This has denied millions of people to get their basic human rights. People are denied ration material, unable to withdraw money from the bank due to this mess.