சென்னை: இறைபக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், இறைபக்தி இல்லாதவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல, அறநிலையத்துறை அதிகாரிகளாக மாற்று மதத்தவர்கள் தமிழகஅரசால் நியமிக்கப்படுகின்றனர். இதனால், கோவிலில் அவ்வப்போது சர்ச்சைகள் எழுகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குகளைஎ நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கும் பணி 34 மாவட்டங்களில் நடைபெற்று வருவதாகவும், அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் நடைமுறையை முடிக்க இன்னும் ஓராண்டு அவகாசம் தேவை என்றும், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் 560 கோயில்களுக்கு தமிழக அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் அறங்காவலர்களாக, அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், மனுதாரர் வழக்கறிஞர், அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது, இது தொடர்பான விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா, இல்லையா என்ற கேள்வி இடம்பெறும் என்று அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியையும் சேர்க்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அறநிலையத்துறை சார்பில், கடந்த விசாரணையின்போது, தெய்வ பக்தி கொண்டவர், அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என இந்த நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்ததால், அந்த கேள்வி இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோபமடைந்த நீதிபதிகள், “இறை பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.
பின்னர், அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு வலியுறுத்தினர்.
மேலும், அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான குழுக்களின் நியமனம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.