சென்னை:
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
7 கட்டங்களாக நடைபெற உள்ள 17வது மக்களவைக்கான நாடாளுமன்றத் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் நடைபெறாத இடங்கிளல் உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரித்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தில், பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு போன்றவை குறித்து மோடி பேசாதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் மோடி, பாகிஸ்தான் பற்றி பேசுவதை கேட்டு மக்கள் சோர்வடைந்து விட்டனர், அவர் தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன்பாவது, மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகாளன (1) வேலை வாய்ப்பு (2) விவசாயிகளின் துயரமும் கடன் மற்றும் (3) மக்களின் அனைத்து பிரிவுகளின் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மக்களிடையே பேசாமல் பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்றும் கேள்வி விடுத்துள்ளார்.
பணமதிப்பிழப்பு, குழப்பம் நிறைந்த ஜிஎஸ்டி, சிறு குறு தொழில்களின் அவலநிலை குறித்து, பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், மோடியின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்கள், குறிப்பாக பாஜகவைச் சேர்ந்தவர்களின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக பிரதமர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.