திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பல இடங்களில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் அருகிலுள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை.
திண்டுக்கல்லில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநகராட்சி பகுதியிலேயே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பிள்ளையார்நத்தத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை. எனவே தங்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் வழங்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் ஆத்தூர் காமராஜர் அணையிலும் தற்போது தண்ணீர் இல்லாததால் சீரான குடிநீர் வழங்க முடியவில்லை. இதனால் இன்று 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வத்தலக்குண்டு சாலையில் காலி குடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற ஜே.சி.பி. எந்திரத்தை நடுரோட்டில் குறுக்காக நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குடிநீர் வழங்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. வினோத் மக்களை கலைந்துபோகும்படியும், இல்லையெனில் தடியடி நடத்தப்படும் என்றும் எச்சரித்தார். ஆனால் மக்கள் அவரது பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதை தொடர்ந்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளருடன் கலந்து பேசி இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.