சோளிங்கர் அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோளிங்கர் அருகே உள்ள பாண்டியநல்லூரில் காமதேனு நகர், ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சோளிங்கர்- பானவரம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாரா வளர்ச்சி அலுவலர் அன்பரசு மற்றும் கொண்டபாளையம் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான காவல் படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில்- எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடந்த முறை மறியலில் ஈடுபட்டபோது தற்காலிகமாக குடிநீர் வினியோகம் வழங்கபட்டது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். ஒன்றிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.