இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில், சீனாவின் அணைக்கட்டும் திட்டங்களுக்கு எதிராக, அங்கு வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா அச்சத்தையும் மீறி, ஏராளமான மக்கள், இரவு நேரத்தில் தீப்பந்தங்களை ஏந்தி, “நதியைக் காப்பாற்றுங்கள், முசாபராபாத்தைக் காப்பாற்றுங்கள்” என்பன போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஆசாத் பட்டன் மற்றும் கோஹலா நீர் மின் திட்டங்களை அமைக்க பாகிஸ்தானும் சீனாவும் சமீபத்தில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சுமார் 700.7 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆசாத் பட்டன் நீர் மின் திட்ட ஒப்பந்தம், கடந்த ஜூலை 6ம் தேதி கையெழுத்தானது.
1.54 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுக்கு, சீனாவின் கேஜோபா குழுமம் நிதியுதவி அளிக்கிறது. 2026ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், சீன நிறுவனங்களின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவுள்ளன என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நதிகளைப் பாதுகாக்க வேண்டியும், இயற்கை வளங்கள் சூறையாடலை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.