நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துக்களுக்கு போதுமான உதிரி பாகங்கள், ஸ்டெப்னி டயர்கள் இல்லாத நிலையில், தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் ஊட்டியில் இருந்து தொலை தூரங்களில் உள்ளன. மலை மாவட்டம் என்பதால், வருவாய் குறைவு என்ற போதிலும் கடந்த பல ஆண்டுகளாக சேவை அடிப்படையிலேயே அக்கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து மசினகுடி, மாயார், கிண்ணக்கொரை, கோரகுந்தா மற்றும் கெத்தை போன்ற கிராமங்கள் தொலை தூரங்களில் உள்ளன. அதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு தொலை தூரங்களுக்கு செல்லும் கிராமங்களுக்கு இரவு நேரங்களில் ஒரு முறை மட்டும் சில பேருந்துகள் செல்லும். பின், அதிகாலை நேரங்களில் அந்த பேருந்து ஊட்டி வந்தடையும்.  இப்பகுதிகளில் தனியார் பேருந்துக்களை இயக்க தடை உள்ளது.

இதுபோன்ற தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துக்களில் ஸ்டெப்னி டயர்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், இந்த பேருந்துகளில் டயர் பஞ்சரானால், வேறு ஒரு பேருந்தில் கொடுத்துவிட்டால் மட்டுமே மீண்டும் அந்த பேருந்து செல்ல முடியும். இதனால், டயர் பஞ்சரானால் பேருந்துகள் அங்காங்கே நடு வழியில் நிறுத்தப்படுகிறது. காலை 7.30க்கு ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, கெத்தைக்கு சென்ற பேருந்து ஒன்று, கடும் போக்குவரத்து நெரிசலால் 9.30 மணிக்கு லவ்டேல் பகுதியை சென்றடைந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.  அப்போது, அந்த பேருந்தின் பின்புற டயர் வெடித்தது. இதனால், அந்த பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. டயர் இல்லாத நிலையில், உடனடியாக அவர்கள் ஊட்டி கிளை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டனர். அதிகாரிகள் மாற்று டயர் வேறு ஒரு பேருந்தில் கொடுத்து விடுவதாக கூறினர். மாற்று டயர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. ஆனால், அதற்குள் அவ்வழித்தடத்தில் வந்த வேறு பேருந்துக்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், பழுதான டயரை மாற்றி மீண்டும் கெத்தைக்கு பகல் 12 மணிக்கு தான் அப்பேருந்து சென்றுள்ளது. கெத்தை செல்லும் பயணிகள் இந்த பேருந்திற்காக பல மணி நேரம் மஞ்சூரில் காத்திருந்த நிலையில், பேருந்து வராததால் தனியார் ஜீப்கள் பிடித்து கெத்தை சென்றுள்ளனர்.

இதனால், தொலை தூர கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற பேருந்துக்களுக்கு ஸ்டெப்னி டயர்களை கொடுத்து அனுப்ப போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.