டெல்லி; நீதித்துறையிலும் அரசியல் நடைபெறுகிறது, கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை, நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை என மத்திய சட்டஅமைச்சர்  கிரண் ரிஜ்ஜூ கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் வார இதழான இ- பாஞ்சான்யா  ஏற்பாடு செய்த சபர்மதி சம்வாத் நிகழ்ச்சியில்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு  உச்சநீதிமன்றம், கொலீஜியம், நீதித்துறையின் பணிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது,  1993-ம் ஆண்டு வரை இந்தியாவில் அனைத்து நீதிபதிகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி மத்திய சட்ட அமைச்சகம் நியமித்து வந்தது.  இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. அந்த நேரத்தில் நாம் மிகச்சிறந்த நீதிபதிகளை கொண்டிருந்தோம். நீதிபதிகளை நாட்டின் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அப்படியென்றால் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.

இதை கடந்த 1993ம் ஆண்டு உச்சநீதிமன்றம், சட்ட அமைச்சகத்துடனான கலந்தாலோசனையை சம்மதமாக (இணக்கம்) என தெரிவித்தது.  நீதிமன்ற நியமனங்களை தவிர மற்ற எந்த துறையிலும் கலந்தாலோசனையை சம்மதமாக (இணக்கம்) வரையறுக்கப்படவில்லை.

ஆனால், பின்பு, கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. நீதிபதிகளின் முதன்மை பணி நீதி வழங்குவது, ஆனால், இந்த நடைமுறையால் (கொலிஜியம்) நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகிறது. நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு முறை தீவிரமாக உள்ளது, இதை கூறுவதற்கு வருந்துகிறேன். ஆனால், அங்கு குழுவாதம் உருவாகுகிறது.

இதை  நாட்டு மக்கள் விரும்ப வில்லை என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு ஆன்மாவோடு நாம் செல்லும்போது, நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை அதனால், நீதித்துறை விமர்சனங் களுக்கு உள்ளாகிறது.

நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவ தில்லை. சட்டமந்திரியாக நான் கவனிக்கும்போது, நீதிபதிகள் பாதி நேரம், மனதில் அடுத்த நீதிபதி யார் என்று முடிவெடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். நீதிபதிகள் மத்தியில் அரசியல் உள்ளதை மக்கள் பார்க்கின்றனர். மற்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் தலையிடாமல் இருந்தால் நீதிபதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியும். ஆனால், நீதிபதி நிர்வாக வேலைகளில் தலையிட்டால் அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான் என்றும் கூறினார்.

மத்திய சட்ட அமைச்சரின் கருத்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்திய நீதித்துறையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களது பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகத்தக்கு அனுப்புகிறது. அதை ஆய்வு செய்யும் சட்ட அமைச்சகம், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கிறது. அதன் அடிப்படையில்,  புதிய நீதிபதிகளுக்கான நியமன ஒப்புதலை ஜனாதிபதி வெளியிடுகிறார்.