டில்லி
இந்தியாவில் சிறப்பு மருத்துவத் துறை வல்லுனர்கள் 82% பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் கடும் துயருற்றுள்ளனர்.
இந்தியாவில் தற்போது அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பல தீவிர நோய்களைக் கண்டறிய அரசு பல திட்டங்கள் தீட்டி வருவதாகவும் அறிவித்து வருகின்றது. இந்த பணிகளுக்கு ஏராளமான சிறப்பு மருத்துவத்துறை வல்லுன்ர்கள் தேவைப் படுகின்றனர்.
சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள விவரங்களின் படி தேவைப்படும் மருத்துவ வல்லுனர்களின் எண்ணிக்கையை விட தற்போதுள்ளவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்திஸ்கர் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ள்து. மேகாலயா, மிசோரம் மற்றும் ஓரிரு யூனியன் பிரதேசங்களில் மட்டுமே தேவையான அளவு வல்லுனர்கள் உள்ளனர்.
இது குறித்து முன்னாள் சுகாதார இயக்குனர் ஆர் கே ஸ்ரீவத்சா, “மத்திய சுகாதார நிலையம் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. இது மக்களின் சுகாதார நலனை கவனிக்க போதுமானதாக இல்லை. சமீபத்தில் முசாபர்பூர் நகரில் நடந்த குழந்தைகள் மரணங்களுக்கு இதுவே முதன்மை காரணமாகும். அங்கு வலுவான ஒரு மத்திய சுகாதார மையம் அமைக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
தற்போது 25000 – 30000 பொது சுகாதார நிலையங்களும் 5624 மத்திய சுகாதார நிலையங்களும் நோயை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த மையங்களின் பனி கருவுற்ற மகளிர், குழந்தைகள் மற்றும் வயதானோர் உடல் நலத்துக்கு தேவையான முக்கிய பணிகளை செய்து வருகின்றன.
இந்தியாவில் உ பி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மற்றும் பீகார் மாநிலங்களில் அதைக அளவில் பொது சுகாதார மையங்கள் உள்ளன. கடந்த மே மாத கணக்கின் படி இந்த மாநிலங்களில் 2000 க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்கள் உள்ளன. இந்திய பொது சுகாதார அமைப்பின்படி பொது சுகாதார மையங்களின் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு சிறப்பு மருத்துவர் மற்றும் ஒரு நர்ஸ் இருக்க வேண்டும். மத்திய சுகாதார மையங்களில் 7 சிறப்பு மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் மொத்தமுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் சிறப்பு வல்லுனர்கள் எண்ணிக்கை தேவையை விட 82% குறைவாக உள்ளது. இந்த பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் அவதிக்குளாகி வருகின்றனர். இதற்காக மாநில மத்திய அரசுகள் தலா ரூ. 319 கோடி மற்றும் ரூ.465 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்துக்கு ரூ.102 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்துக்கு இந்த வருடம் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதற்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கிடு செய்யப்படுகிறது. சென்ற வருடம் உ பி மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுமையாக பயன்படுத்தவிலை என கூறப்படுகிறது.