சென்னை:
5வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இன்றுமுதல் ஓடத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் சற்றே நிம்மதியடைந்து உள்ளனர்.
கொரோனாவால் முடக்கப்பட்டிருந்த பேருந்து சேவைகள் தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக, அரசு அறிவித்துள்ள பாதுகாப்புடன் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு இன்று இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50 வீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழகஅரசு 8 மண்டலங்களாக போக்குவரத்து கழகத்தை பிரித்து இயக்கி வருகிறது. பேருந்துகளில் பயணிகள் பின்பக்க படிக்கட்டுக்கள் மூலம் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதும் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் கிருமி நாசினி கொடுக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதுபோல, அரசு பேருந்துகளை இயக்குவதற்கு முன் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு தெர்மல் சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு முதன்முதலாக பேருந்துகள் ஓடத்தொடங்கின. ஆனால் எதிர்பார்த்த அளவில் மக்கள் கூட்டம் இல்லை. ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் பேருந்துகள் ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, சாலைகளும் பரபரப்பாக இயங்கி வருவதால், விரைவில் இயல்புநிலை திரும்பிவிடும் என நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.