திருவாரூர்: கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுப் பணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், ஒரு துண்டு கரும்பு, முந்திரி, ஏலக்காய், திராட்சை என பொங்கல் தயாரிக்கும் பொருட்கள் அடங்கிய பையை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு ரூ.1000 என்பதை மாற்றி ரூ.2500 வழங்குவதாக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பொங்கல் பரிசுப் பணம் பெறும் டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2500 பெற சம்பந்தப்பட்ட அட்டைதாரர்கள் நேரில் வந்து கைவிரல் ரேகை வைத்தால் தான் பணம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.
இந் நிலையில், கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ரூ.2500 உள்ளடக்கிய பொங்கல் பரிசை, ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாய விலை கடைகளில் மட்டுமே வாங்க முடியும். அதற்கு பயோ மெட்ரிக் முறை பயன்படுத்தப்பட மாட்டாது.
எனவே, வழக்கமான முறையில் ரேஷன் அட்டையை பயன்படுத்தி பொருட்களையும், பொங்கல் பரிசையும் பெற்று கொள்ளலாம். குடும்ப அட்டையும், டோக்கனும் இருந்தால் போதும் என்று தெரிவித்தார்.