சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களின் உணர்வே என் உணர்வு என்ற இளையராஜா, இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதவாறு நடவடிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இளையராஜா மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது பேசிய இளையராஜா, “இசை எனக்கு தெரியாது என்பதாலேயே நான் இப்போதும்… இசை அமைத்துக் கொண்டு இருக்கிறேன். இசை எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரிந்தால் இங்கிருந்துதான் வருகிறது என்று கூறி விடுவேன். தெரிந்து விட்டால் இசையமைக்க முடியாது. எனக்கு இசை தெரியாது என்பதை சர்வ சத்தியமாய் நம்புகிறேன் என்றார்.
நான் உலகம் முழுவதும் சுற்றினாலும் சென்னை வந்து இறங்கியதும் இசைத்தாய் இங்கே இருப்பதை என்னால் உணர்கிறேன். என்னுடைய இசை மூகாம்பிகையின் இசை. அதில் மாற்றமே இல்லை” என்றார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இளையராஜாவிடம் செய்தியாளர்கள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வே என் உணர்வு என்றவர், இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதவாறு நடவடிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.