தெலங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டி கொலையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் சமூக வலைதளவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவராக இருந்தவர் பிரியங்கா ரெட்டி. ரெங்காரெட்டி மாவட்டம், கொலுரு கிராமத்தை சேர்ந்த 26 வயதான இவர், கடந்த 27ம் தேதி காலை தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பவில்லை. தனது வீட்டிற்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனம் பழுதடைந்த நிலையில், அதை சரி செய்ய அங்கிருக்கும் நபர்களிடம் பிரியங்கா ரெட்டி வேண்டுகோள் வைத்துள்ளார். அப்போது தனது சகோதரிக்கு அழைத்து பேசிய பிரியங்கா ரெட்டி, சந்தேகத்திற்கிடமான பலர் தன்னை சுற்றி நிற்பதாகவும், தனது வாகனம் பழுதடைந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அப்போது அவரது சகோதரி அருகில் உள்ள டோல்கேட் பகுதிக்கு வந்துவிடும்படி பிரியங்கா ரெட்டிக்கு அறிவுரை வழங்க, பயத்துடனேயே அழைப்பை துண்டித்துள்ளார்.
காலை வரை பிரியங்கா ரெட்டி வீடு வந்து சேராத காரணத்தால், அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து விசாரித்த காவல்துறையினர், ஷாத் நகரில் உள்ள சதன்பளி பாலத்தில் பிரியங்காவின் உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதை கண்டறிந்து, அவரது உடலை மீட்டனர். இது தொடர்பாக பிரியங்கா ரெட்டியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேதபி பரிசோதனையில் பிரியங்கா ரெட்டி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிந்த காவலர்கள், பிரியங்கா ரெட்டியின் இருசக்கர வாகன எண்ணையும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து குற்றவாளிகளான 4 இளைஞர்களை கைது செய்தனர்.
பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகவலைதளத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை அம்மாநில அரசு பெற்றுத் தர வேண்டும் என்றும், பிரியங்கா ரெட்டி போல வேறு எந்த பெண்ணும் இனி பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் கொந்தளித்து வருகின்றனர். அத்தோடு, #Nirbhaya #Priyanka #RipPriyanka #RipPriyankaReddy என்கிற ஹேஷ்டேக் மூலமும் பலர் தங்களது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.