நெருக்கடிக் காலத்திலும் ஏமாற்றும் மோசடி கும்பல்கள்
சென்னையில் கொரோனா காலத்தில் தனிநபர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இது சம்பந்தமாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்ததில் இதில் தொடர்புடைய நபர்கள் விபரம் தெரியவந்துள்ளது.
அந்த அடிப்படையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவர் கட்டடத்தில் பென்ஸ் கிளப்பிற்குச் சொந்தமான இடத்தில் போலி கால் சென்டர் நடத்திய இந்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன் மற்றும் செல்வகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட செல்வகுமார் என்பவரே மூளையாகச் செயல்பட்டுப் பல போலி கால் சென்டர்களை சென்னையில் நடத்தியது விசாரணையில் அம்பலமானது.
அந்த அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் நடத்திய தொடர் விசாரணையில், பெருங்குடி மற்றும் திருவான்மியூரில் செல்வகுமாரின் கூட்டாளிகள் சிலரும் போலி கால் சென்டர் நடத்தி வந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். திருவான்மியூரில் உள்ள எல்பி சாலையிலும், பெருங்குடியிலும் போலி கால் சென்டர்களை நடத்தி பலரையும் ஏமாற்றிய கோபிநாத், தியாகராஜன், மணி பாலா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி கும்பல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பெயரைப் பயன்படுத்தி பெண்களை வைத்து பலரையும் ஏமாற்றியது தெரிய வந்தது.
கடன் தருவதாக ஆசை காட்டி வாடிக்கையாளர்களிடம் வெரிபிகேஷன் செய்வதாகக் கூறி அவர்களின் ஏடிஎம் நம்பர் அதன் ரகசிய குறியீட்டு எண் இரண்டையும் வாங்கி அவர்களின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்வது தான் இவர்களின் வாடிக்கை. அதுபோல இவர்களிடம் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த இரண்டு நாட்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கடன் வாங்கித் தருவதாகப் பேசும் நபர்களை நம்பி அசல் ஆவணங்கள், ஏடிஎம் நம்பர், ரகசிய குறியீட்டு எண் போன்றவற்றைத் தர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
– லெட்சுமி பிரியா