லக்னோ
கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார்.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்திலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. கொரோனாவில் இருந்து தப்ப உலக நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கோவி ஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலியா மாவட்டத்தில் உள்ள பெய்ரியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சுரேந்திர சிங் அந்த வீடியோவில், “கோமியத்தைத் தண்ணீரில் கலந்து விடிந்ததும் வெறும் வயிற்றில் பருக வேண்டும். பிறகு அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படிப் பருகினால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பலாம். எனது ஆரோக்கியமான உடல்நிலைக்கு இதுதான் காரணமாகும்.
என்னால் மக்களுக்காக ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் சோர்வின்றி கோமியத்தைப் பருகுவதால் உழைக்க முடிகிறது. இதைத் தவிரக் கோமியம் என்பது எல்லாவிதமான நோய்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாகும். அதிலும் இதய நோய்களுக்குக் கோமியம் சிறப்பாக வேலை செய்து நல்ல குணம் அளிக்கும்” என கூறி உள்ளார்.
மேலும் இந்த வீடியோவில் ஒரு கிளாசில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கோமியத்தைக் கலந்து குடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. சுரேந்திர சிங் வீடியோவால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.