புதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாமென்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையங்களையும் மக்கள் தேர்வுசெய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளதாவது, “இப்போதிருந்து இன்னும் 3 வாரங்களுக்குள் நம்மிடம் 3 முதல் 4 தடுப்பு மருந்துகள் வரை பயன்பாட்டில் இருக்கும். அவை அனைத்தும் ஒரே மையத்தில் கிடைப்பது சாத்தியமில்லை.

ஒரு மையத்தில், ஒரு தடுப்பு மருந்து மட்டுமே கிடைக்கும். எனவே, நீங்கள் தேர்வு செய்யும் தடுப்பு மருந்து எங்கு கிடைக்கிறதோ, அந்த மையத்தை தேர்வுசெய்து அவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம், தடுப்பு மருந்து விஷயத்தில், மக்களுக்கான விருப்பத் தேர்வுகளுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது” என்றுள்ளார் அவர்.