சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று சேலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசாரமும் கலைகட்டியுள்ளது. அதிமுக, திமுகவுக்கு ஈடாக மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
ஏற்கனவே முதல்கட்ட 4 நாட்கள் தேர்தல் பிரசாரத்தை கடந்த டிசம்பர் மாதம் மதுரை தொடங்கிய நிலையில் தற்போது 4வது கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சேலம் அழகாபுரம் பகுதியில் வாகனத்தில் நினற்வாறே வாக்கு சேகரித்த கமல்ஹாசன் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, முதலில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதாக கூறியவர், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உங்களது முகமும், ஆசியும் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது.
இங்கு குழுமியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 100 நபர்களை சந்தித்து கூறினாலே போதும் நாளை நமதே. நம் கதை தொடங்கும், அவர்களது கதை முடியும். இது நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். இனிவரும் 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு புத்துணர்வு தரும் ஆண்டாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் நேர்மையான திட்டங்களை வகுத்து பொதுமக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே என்று கூறினார்.
பின்னர் இரவு ரெட்டிப்பட்டி, அயோத்தியா பட்டணம் பகுதிகளிலும் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, சினிமாகாரனாக மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என நினைத்தால் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு வீடுகளில் அமர்ந்தே பார்த்திருப்பார்கள் என்றும் இப்படி கால் கடுக்க வந்து நிற்க வேண்டியதில்லை என தெரிவித்ததுடன், நேர்மையை நோக்கிய மாற்றத்துக்கு தமிழகம் தயாராகி வருவதாகவும் அதற்கான கருவியாக தன்னை மக்கள் கருதுவதாகவும் கூறினார்.
கமல்ஹாசன் நேற்று முதல்நாளில், ஏற்காடு, ரெட்டியப்படி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த கமல், இன்று முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார்.
சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்லும் கமல்ஹாசன் இரவு மீண்டும் சேலத்தில் தங்குகிறார். நாளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செல்கிறார்.