புனே

கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து புனே நகரம் படிப்படியாக மீண்டு வருவதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தினசரி தாக்குதல் தற்போது 3.5 லட்சத்தைத் தாண்டி வருகிறது.  இதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று ஒரே நாலில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி மகாராஷ்டிர அரசு மாநிலத்தின் முக்கிய நகரங்களான மும்பை, புனே உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.    இந்த இரண்டாம் அலை தாக்குதலில் புனே நகரம் பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.   மக்களும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் புனே நகரில் ஓரளவு பாதிப்பு குறைந்து வருகிறது.  நேற்றைய புனே நகர பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ள போதிலும் அதற்கு முந்தைய நாட்களை விடக் குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுவரை சோதனை நடந்ததில் 25% மக்கள் பாதிப்பு அடைந்த நிலையில் தற்போது 22% ஆக குறைந்துள்ளது.

இதே நிலை மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிலவி வருவதாக நிபுணர்கள் கூறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் இதே நிலை தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை குறையக் குறைய இன்னும் ஒரு மாத காலத்தில் மாநிலம் முழுமையாக கொரோனாவில் இருந்து மீளும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.