காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை புத்தகத்தை இந்தியாவில் வெளியிட இருந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, தற்போது அதை வெளியிடப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புத்தகத்தின் சில பகுதிகளில் சில மாற்றங்களையும், தகவல்களை நீக்கவும் பதிப்பகம் கேட்டதாகவும், அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவில் புத்தகத்தை வெளியிட பல பதிப்பகங்கள் போட்டியில் உள்ளன. இதில் ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புத்தகம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Alfred A. Knopf பதிப்பகம் முதலில் இதை வெளியிடுகிறது. முதல் பதிப்பில் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி இதற்கு முன்பும் சில புத்தகங்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார். ஆனால், இந்தப் புத்தகம் அவரது வாழ்க்கை குறித்த மிகவும் தனிப்பட்ட மற்றும் விரிவான பதிவு என அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது குடும்பம் குறித்து பல தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அவர்களின் முடிவுகள், செயல்பாடுகள் மற்றும் மனிதநேய பலவீனங்கள் குறித்து உண்மையான பார்வையை இந்தப் புத்தகம் வழங்கும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 60 ஆண்டுகளில் தான் கண்ட சமூக மற்றும் அரசியல் மாற்றங்களையும் இதில் பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா சமீப காலங்களில் சில புத்தகங்களை வெளியிடுவது தொடர்பாக சர்ச்சைகளில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.