அமேசான் ப்ரைமில் பென்குவின் படம் இன்று வெளிவந்தது, அதை பார்க்க ஆவலோடு இருந்த பலரில் நானும் ஒருவன். நடிகை கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ் என்கின்ற ஆதிதேவ், மற்றும் பல புது முகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கும்: ரிதம் (தாளம்) என்ற பெயரில் வரும் கீர்த்தி சுரேஷ் ஒரு நிறை மாத கர்ப்பிணி; அவர் ஒரு கோர கனவைக் கண்டு விழிக்கிறார். அந்த கனவில், குடையுடன் வரும் “சார்லி சாப்ளின்” முகமூடி அணிந்த ஒருவர் ஒரு குழந்தையை துண்டு துண்டாக வெட்டி, அதன் பின் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு பையுடன் ஏரியின் உள் இறங்கிச் செல்கிறார்.

ரிதம் தன் கணவர் வெளியூர் சென்றிருப்பதால், அவர் மகப்பேறு மருத்துவ சோதனைக்கு எவர் துணையுமின்றி செல்கிறார். அங்கே ஒரு சிறிய பிளாஷ் பாக்; முதல் மகனாகிய அஜெய்யை எப்படி ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு துக்க நிகழ்வில் தொலைத்தார் என்று.

பிறகு மருத்துவர் அவரை பழைய நினைவுகளை மறக்கச் சொல்லி அறிவுறுத்திகிறார், குறிப்பாக ஒரு ஏரிக்கு செல்லாதீர்கள் என்று கூறுகிறார். வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது, ரிதம் அந்த ஏரிக்குச் செல்கிறார். இங்கே மீண்டும் ஒரு பிளாஷ் பாக்; தன் மகன் அஜெய் ஒரு “சார்லி சாப்ளின்” முகமூடி அணிந்த ஒருவரால் எப்படி கடத்தப்படுகிறார். ஒரு வருடம் கழித்தும் அந்த சிறுவனை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு, ரிதம் வாழ்க்கை எப்படி சுழலுகிறது, விவாகரத்து, மறுமணம், அடுத்த குழந்தை, எனினும் தன் முதல் மகனைத் தேட வேண்டும் என்ற மனப் போராட்டம்.

ரிதம் அஜெய்யை கண்டுபிடித்தாரா, அவன் யாரால் கடத்தப்பட்டான் என்பது மீதிக் கதை.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கிய இந்த படமானது திரைக்கு ஒன்றும் புதிதாக கொண்டுவரவில்லை. இந்தப் படத்தில், கதை என்பது ஒரு சிறு பகுதி தான்; பெரும்பாலானா இடங்களில் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அது நடக்கிறது. திரில்லர் படங்களில், அதுவே தோல்வி. கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் வலுவாக அமையாததால், பல இடங்களில் அவர் செயற்கையாக நடிப்பது போல் தோன்றுகிறது. இயக்குனரிடம் கேட்கத் துடிக்கும் கேள்வி, ஏன் சார்லி சாப்ளின் முகமூடி?

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் மட்டுமே, தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சந்தோஷ் நாராயண் ஏனோ இசையமைக்க மறந்தார்? பின்னணி இசை படத்தோடு பின்னிப் பிணையாமல், பரவலாக வருகிறது.

இந்த படம், ஆங்கில படங்கள் பலவற்றை நினைவுபடுத்தினாலும், எந்த படத்தையும் ஒப்பிடக் கூட மனம் வரவில்லை.

மொத்தத்தில் பென்குவின் ஒரு இறக்கையில்லாப் பறவை.