வாஷிங்டன் :
நடுநிலை தவறிய கட்டுபாடற்ற அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு கொண்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் அதனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுத பயன்பாட்டை முறியடிப்பதற்கு உண்டான வழிகள் ஏதும் இருக்கிறதா என்று அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரிக்கு சபாநாயகர் நான்சி பிலோஸி கேள்வியெழுப்பி இருக்கிறார்.
இந்த மாதம் 6 ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, அமெரிக்க அரசின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்த வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்வதாகவும் பொறுப்புகளை அவரிடம் சுமூகமாக ஒப்படைக்க ஒத்துழைப்பதாகவும் 7 ம் தேதி கூறிய டிரம்ப், ஜனவரி 20 ம் தேதி பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று 8 ம் தேதி தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஒரு சம்பிரதாய நிகழ்வு தான் என்ற போதும், அடுத்தடுத்த நாட்களில் இருவேறு விதமாக பேசி இருப்பது, டிரம்ப் தனது சுயகட்டுப்பாட்டை இழந்திருக்கிறார் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் பதவியில் இருந்து டிரம்ப்பை நீக்குவதற்கு துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பெரும்பான்மையான அமைச்சர்களின் ஆதரவு தேவைப்படுவதால், இதுகுறித்து பரிசீலிக்க துணை அதிபர் மைக் பென்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார் பிலோஸி.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி மார்க் மில்லே-க்கு சபாநாயகர் நான்சி பிலோஸி அனுப்பியுள்ள கடிதத்தில், அதிபர் டிரம்ப் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டால் அவரிடம் உள்ள அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் அதிகாரத்தை முறியடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
பிலோஸியின் இந்த கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்திய மில்லேவின் செய்தி தொடர்பாளர், இது குறித்து அவருக்கு பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சி.என்.என் செய்தி நிறுவனத்தின் பென்டகன் செய்தியாளர் பார்பரா ஸ்டார், அதிபராக பொறுப்பு வகிப்பவருக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த முழு அதிகாரம் உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் சிலர் தெளிவு படுத்தியதாகவும் அதே நேரத்தில், “அவர் இதனை சுயமாக செயல்படுத்த முடியாது” என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.