பெங்களூரு: கடந்த சில நாட்களாக பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பிரபலங்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமாரசாமி தலைமையிலான கர்நாடக கூட்டணி அரசை கவிழ்க்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், எதிர்க்கட்சித்தலைவர்கள், மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் எனப்படும் மென்பொருளைக் கொண்டு, முக்கியஸ்தர்கள், ஊடகத்துறையினர் உள்பட பலரது டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் நற்பெயருக்கு உலக அரங்கில் களங்கம் கற்பிக்கும் நோக்கில்தான் பெகாசஸ் விவகாரம் வெளியாகி உள்ளது. இதனால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடம் புரள வைக்க முடியாது என கூறினார். அதே வேளையில், இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மத்திய அரசு யாரையும் ஒட்டு கேட்கவில்லை என கூறியிருந்தார், ஆனால் வைஷ்னவ் தொலைபேசியையே 2017 முதலாக ஒட்டு கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன.
இந்தநிலையில், கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான ஏற்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசை கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர்களின் செயலர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அதன் மூலம் குமாரசாமி கவிழ்க்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தகவல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.