டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவையை சபாநாயகர்  ஆகஸ்ட் 9 காலை 11 மணிவரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ந்தேதி முதல்  நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக்கேட்பு குறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதால், அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்த அவைகளை முடக்கி வருகின்றன. இன்று 14வது நாளாக இரு அவைகளும் முடக்கப்பட்டு உள்ளது.

அவையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட திரினாமுல் கட்சி எம்.பி.க்கள் 7 பேர் ஏற்கனவே தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டட நிலையில், அவையில், அமளியில்  ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இரு அவைகளின் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை மீறி எதிர்க்கட்சியின் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இன்று காலை கூட்டம் தொடங்கியதும், மீண்டும்   பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அமளி நிலவுவதால், திங்கள்கிழமை காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.