டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு சிறந்த மனிதர் என்ற விருதை பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.
பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக பீட்டா அமைப்பின் அறிவிப்பில் கூறி இருப்பதாவது: விலங்குகள் மீது பாசமும், நேசமும் கொண்டவர் கோலி. அண்மையில் கூட, ஒரு யானையை 8 பேர் துன்புறுத்தியதை கண்டு உடனே பீட்டா அமைப்புக்கு தகவல் கொடுத்தார்.
கடிதமும் எழுதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க கோரினார். இதையடுத்து போலீசார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூருவில் சாலையில் அனாதையாக காயத்துடன் இருக்கும் நாய்களுக்கு வசிப்பிடம் அமைக்க கோலி உதவினார். தமது ரசிகர்களிடம் நாய்களை தத்தெடுத்து வளர்க்குமாறும் அறிவுரை கூறினார்.
எனவே, விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.