பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் அதே நாளில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள மதர் இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே நின்றுகொண்டிருந்த தெற்கு டெல்லி போலீஸ் கமிஷ்னர் பெனிடா மேரி ஜெய்கர் காரின் மீது மோதிய விஜய் சேகர் சர்மாவின் ஜாகுவார் ரக சொகுசு கார், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.

பிப். 22 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இந்த கார் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா உடையது என்று தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்.

பே டிஎம் நிறுவன தணிக்கையில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த உரிய விளக்கம் கிடைக்கும் வரை அந்நிறுவனம் தனது டிஜிட்டல் பணபரிமாற்ற சேவையில் புதிய பயனாளர்களை சேர்க்க கூடாது என்று ஆர்.பி.ஐ. நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் விஜய் சேகர் சர்மா கைதாகி ஜாமீனில் வெளிவந்த விவகாரம் தெரியவந்துள்ளதை அடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்,பி.ஐ. இதற்கு முன் இரண்டு முறை இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது 2018 ம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்திருந்தது.

தவிர, 2021 ஜூலை மாதம் தவறான தகவல் அளித்து பணப்பரிமாற்றம் செய்ததாக பே டிஎம் நிறுவனத்திக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்தது ஆர்.பி.ஐ.

தற்போது மீண்டும் ஆர்.பி.ஐ.யின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருக்கும் பே டிஎம் நிறுவனத்தின் சி.இ.ஓ. வழக்கு ஒன்றில் ஜாமீனில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.