பெங்களூர்.:  ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் கூடிய கியூஆர் கோடு போஸ்டர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  40 சதவீத அரசு ஒப்பந்தங்களை பெற முதலமைச்சருக்கு நேரடியாக பணம் செல்லுமாறு, அவரின் புகைப்படத்தை நகர் முழுவதும் பே.டி.எம். கியூ ஆர் கோடு வடிவில் ஒட்டி காங்கிரஸ் கட்சி அதிரடி பிரச்சாரம் செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 40 சதவிகிதம் வரை கமிஷன் கேட்கப்படுவதாக ஏற்கெனவே ஒப்பந்ததாரர் சங்கத்தினர்  பொம்மை தலைமையிலான பாஜக மாநில அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தனர். இதுதொடர்பாக  முதலமைச்சரிடம் புகார் கொடுத்தும், முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், நகர முனிசிபாலிட்டி ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவருமான ஆர் அம்பிகாபதி சமீபத்தில் பெங்களூருவின் டோம்லூரில் ரூ.5 கோடி மதிப்பில் விளையாட்டு மைதான் ஒன்றை கட்டியெழுப்பியுள்ளார். இதற்காக அரசு ஒதுக்கிய தொகையில் 40%-ஐ அமைச்சர்களின் சில இடைத்தரகர் களுக்கு லஞ்சமாக கொடுததாக கூறியுள்ளார். இவ்வாறு கொடுக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது இன்று நேற்று நடக்கும் பிரச்னையல்ல. சுமார் ஓராண்டுக்கும் மேலாக இது நீடித்து வருகிறது என்று ஓப்பனாக கூறியிருந்தார்.  மாநிலம் முழுவதும் இம்மாதிரியான ஊழல்களும், முறைகேடுகளும் எல்லா ஆட்சிக்காலத்தில் இருந்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 5 சதவிகிதமாக இருந்த இந்த கமிஷன் தொகை 40 சதவிகிதமாக அதிகரித்ததாக ஒப்பந்ததாரர்களின் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பிரச்னை ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உயுள்ளது. இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில், பேசிம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மாநில பாஜக அரசு, அரசு ஒப்பந்தங்களுக்கு பெறும் 40% கமிஷன் தொகையை பெறுவதை சுட்டிக்கட்டி, முதலமைச்சர் பொம்மை படத்துடன் கியூஆர் கோடு எம்பளம் போன்றவை உருவாக்கி இந்த போஸ்டர்கள் தயார் செய்யப்பட்டு, பேருநது நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இந்த நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.