டெல்லி:

ஜூன் 15ம் தேதிக்குள் ஆயிரத்து 500 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவில்லை என்றால் சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மும்பை பங்கு சந்தை மையத்தின் சஹாரா கணக்கில் ரூ. 1,500 கோடியை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், 552.22 கோடி ரூபாயை ஜூலை 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மின்னணு முறையில் ஆர்டிஜிஎஸ் மூலம் பணத்தை செலுத்தலாம். குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் சஹாரா தலைவர் சுப்ரதராய் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று நீதிபதி எச்சரித்தார். வழக்கு விசாரணையை வரும் ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அது வரை சுப்ரதராய்க்கு வழங்கப்பட்டுள்ள பரோல் தொடரும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 19ம் தேதி சுப்ரதராய் நேரில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கில் ரூ. 10 கோடி செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சென்னையை சேர்ந்த பிரகாஷ் சுவாமி என்பவரை கைது செய்ய நீதிபதிகள் ரஞ்சன்கோபால், சிக்ரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக இவர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார்.