டெல்லி :
மாநிலங்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையைத் தருவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார்.
நிதி அமைச்சகம் ஒரு கடினமான நிதி நிலையில் உள்ளது, மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது, ஆனால், இதனைத் திரும்பிச் செலுத்தத் தேவையான நிதி இல்லை.
இந்த நிலையில், பற்றாக்குறை இருப்பினும் மாநிலங்களுக்குத் தரவேண்டிய வரி இழப்பீடுகளைக் கட்டாயம் மத்திய அரசு திரும்பத் தரவேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் உறுதியாகக் கூறினார்.
தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்ட மத்திய அரசுக்கு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்த ஐந்தாண்டு கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் மத்திய அரசு அதனைத் திரும்பிச் செலுத்தியே ஆகவேண்டும் என்று பதிலளித்திருக்கிறார்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, பழைய வரிவிதிப்பு முறையிலிருந்து ஜிஎஸ்டி-க்கு மாறும் போது ஏற்படும் இழப்பை மாநிலங்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
ஜிஎஸ்டி நிதியில் இருந்து மாநிலங்கள் கடன் பெற முடியுமா என்பது குறித்த நிதி அமைச்சகத்தின் கேள்விக்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் மாநிலங்கள் இதுபோல் கடன் பெற முடியும், ஆனால் அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் உரையாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜிஎஸ்டி இழப்பீடு என்பது மாநிலத்தின் உரிமை என்று வாதாடினார்.
அப்போது பேசிய சோனியா காந்தி, “மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய மோடி அரசு, மறுபுறம் தொடர்ந்து லாபமீட்டி வருகிறது” என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “எல்லா பணமும் வெளியே வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது நம்முடையது, அதற்கு நாம் தகுதியானவர்கள். நாங்கள் பிச்சை எடுக்கவில்லை, நாங்கள் பிச்சை எடுப்பதாகவும் இல்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து ஜி.எஸ்.டி.யின் போக்கை மாற்றியமைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருந்தபோதும், மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவையைத் தீர்க்கும் முயற்சியில் மாநிலங்களுடன் ஜி.எஸ்.டி கவுன்சில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு விடைகிடைக்கும்.