விதர்பா
ராகுல் காந்தியின் புது அவதாரத்தை கண்டு மோடி பயந்துள்ளதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தற்போது மகாராஷ்ட்ராவின் விதர்பா பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சுற்றுப் பயணத்தின் போது அந்தப் பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகளை சந்தித்து அவர்களின் துன்பங்களை கேட்டு அறிந்தார். மேலும் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
பவார் தனது உரையில், “தற்போது குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழு வீச்சாக இறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருடைய புது அவதாரம் இது எனவே சொல்லலாம். இதைக் கண்டு பா ஜ க மற்றும் மோடிக்கும் மிகவும் பயம் உண்டாகி உள்ளது. அந்த பயத்தை மறைத்துக் கொள்ளவே போஃபர்ஸ் பற்றி இப்போது பேசி ராகுல் மீது களங்கம் உண்டாக்க முற்சிக்கின்றனர்.
அருண் ஜெட்லி புதிய வேலை வாய்ப்புகள் வரும் என உறுதி அளித்தார். ஆனால் தற்போதுள்ள வேலை வாய்ப்புகளே குறைந்து வருகிறது. ஜவுளித்துறையில் மட்டும் 20000 பேருக்கு மேல் பணி இழந்துள்ளனர். அதற்கு அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். சிவசேனா மகாராஷ்டிராவில் பா ஜ க வுக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொண்டால் எங்கள் கட்சி ஆதரவு அளிக்காது.” எனக் கூறினார்.