ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தீ விபத்தில் சிக்கிய தனது மகன் சிறுகாயங்களுடன் தப்பியதை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் முடி காணிக்கை செலுத்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் உறுதிமொழி அளிக்கவேண்டியது அவசியம் என்ற விதியை ஏற்று அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட அன்னா பின்னர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான அன்னா லெஷ்னேவா கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பவன் கல்யாண் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவதாக அன்னா லெஷ்னேவா-வை திருமணம் செய்து கொண்டார், தவிர அன்னா லெஷ்னேவா-வுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னா மற்றும் பவன் கல்யாண் இருவருக்கும் மார்க் சங்கர் என்ற 8 வயது மகன் இருக்கிறார்.
இவர் கடந்த வாரம் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் சம்மர் கேம்பில் இருந்தபோது அந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார், இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதில் அவரது கை மற்றும் காலில் தீக்காயம் ஏற்பட்டது தவிர சுவாச கோளாறும் ஏற்பட்டது இதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையில் தற்போது நலமுடன் வீடு திரும்பினார்.
இந்த விபத்தில் தனது மகன் நலமுடன் வந்ததை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னா முடி காணிக்கை செலுத்தினார்.