சென்னை
இரண்டாம் அலை கோரோனாவில் முதல் முறையாக இரு தினங்களாக சென்னை மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழகத்தில் இரு தினங்களாகப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில் சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இங்கு நேற்றும் இன்றும் 3000க்கும் குறைவான பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மே மாத தொடக்கத்தில் இருந்தே மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியது. எனவே பல மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. ஆயினும் பல நோயாளிகள் மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை தொடர்ந்து வந்தது.
சென்னை நகர மருத்துவமனைகளில் நகர நோயாளிகள் மட்டுமின்றி வெளியூர் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைவதுடன் குணமாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை இரு தினங்களாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் நோயாளிகள் எண்ணிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் 8,866 ஆக இருந்தது. தற்போது அதில் 400 காலியாகி உள்ளது. இதனால் பல புது கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பது எளிதாக உள்ளது.