அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவமனையின் “கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சை பெற்றவரின் ரத்த பரிசோதனை முடிவு இதுவரை கிடைக்காத நிலையில், அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கேரளாவில் பணியாற்றி வருகிறார். நாடு முழுவதும் ஊரங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து அரியலூர் வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டதால், கடந்த ஏப்ரல் 6ம் தேதி அரியலூர் தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது ரத்த மாதிரிகளை கடந்த 7ந்தேதி சேகரித்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியாத நிலையிலேயே, வார்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் கேரளாவில் இருந்து தனது சொந்த ஊரான கடம்பூருக்கு நடந்தே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டதால், மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.