ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளி ஒருவருக்கு தட்டு இல்லாத காரணத்தால் தரையில் சோறுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ranch
ராஞ்சி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு காரணமாக பல்மதி தேவி என்ற பெண் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் உணவு கேட்டப்போது முதலில் அவரை அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் தட்டு இல்லை என்ற காரணம் கூறி அவருக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தரையில் உணவு பரிமாறியிருக்கின்றனர். இந்த தேசத்தின் மதிப்புக்குரிய குடிமகளான தான் அவமதிக்கப்படுவதுகூட தெரியாமல் அந்த ஏழைப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அந்த உணவை உண்டு பசியாறியிருக்கிறார். இதைப்பார்த்து வெகுண்டெழுந்த சிலர் அக்காட்சியை படம் பிடித்து கசியவிட பிரச்சனை பெரிதாகியிருக்கிறது.
இது தொடர்பாக மருத்துவமனையின் இயக்குனர் பி.எல்.ஷெர்வாலை தொடர்புகொண்டபோது இங்கு நாங்கள் நோயாளிகளுக்கு தட்டில்தான் உணவு வழங்குகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நோயாளிகள் சாப்பிட தட்டுக்குகூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் ஆண்டு பட்ஜெட் 300 கோடி ரூபாய் ஆகும்.
சமீபத்தில்தான் ஒடிசாவில் ஆம்புலன்ஸ் வழங்கப்படாமல் தனது மனைவியின் பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் ஒரு மனிதர் சுமந்து சென்ற அவமானத்தை நாடு சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.