டில்லி

வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம் தனது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது.

யோகா பயிற்சியாளர் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் பலவகை வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.  இந்தத் துறையில் மிகவும் பெரிய நிறுவனமாக உள்ள பதஞ்சலியின் சென்ற ஆண்டு வருமானம் ரூ.10561 கோடி ரூபாய்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2014-15ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.2006 கோடி ஆகும்.  இந்த வருடத்தில் வரும் 2018ஆம் வருடம் மார்ச் இறுதிக்குள் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ. 20000 – 25000 கோடியை எட்டிப் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

தற்போது பதஞ்சலி நிறுவனம் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை நிறுவ உள்ளது.  இதுவரை வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம் முதல் முறையாக மின் உற்பத்தி துறையில் காலடி பதிக்க உள்ளது.  ஏற்கனவே இது குறித்த கட்டமப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பதஞ்சலி நிறுவனம் தற்போது 120 மெகாவாட்டுகள் உற்பத்தி செய்யும் அளவு திறன் உடையதாக உள்ளது.  நொய்டாவில் இன்னும் சில மாதங்களில் உற்பத்தி துவங்க உள்ளது.  இதற்காக ரூ. 100 கோடியை இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.