பஸ்வான் கட்சி பீகாரில் 143 தொகுதிகளில் தனித்து போட்டி..

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், டெல்லி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

தொகுதிப் பங்கீடு குறித்து பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் ,கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தினார். கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வென்ற லோக் ஜனசக்தி, 30 தொகுதிகளைக் கேட்டு பிடிவாதமாக உள்ளது.

ஆனால் 20 இடங்களுக்கு மேல் தர முடியாது என பா.ஜ.க. திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 143 தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிராக் பஸ்வான், இப்போது ஜாமுய் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.

லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிடுவதால் பீகாரில் மும்முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

-பா.பாரதி