மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை, வங்கியின் லாக்கரில் இருந்து எடுத்து, தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் இன்று  ஓபிஎஸ் ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின திருவுருவ சிலைக்கு கடந்த 2014ம் ஆண்டு  அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நன்கொடையாக வழங்கினார். இந்த தங்க்கவசம், ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின்போது தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் மதுரையில் உள்ள வங்கி பெட்டகத்தில் வைக்கப்படும்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக அதிமுக கட்சி சார்பில், வழங்கிய  தங்கக் கவசம் இன்று,  மதுரை அண்ணா நகரிலுள்ள பேங்க ஆஃப் இந்தியாவிலுள்ள லாக்கரில் இருந்து எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வங்கிக்கு சென்று, தேவரின் தங்கக்கவசத்தை பெற்று அதை, பசும்பொன் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தனர்.

விழா முடிந்த பின்னர் மீண்டும், நவம்பர் 1-ம் தேதி தங்க கவசம் மீண்டும் வங்கியில் வைக்கப்படும்.