டில்லி:

ரூ. 50 கோடிக்கு மேல் கடன் வாங்குவோர் பாஸ்போர்ட் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரது சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில் மத்திய நிதித்துறை செயலர் ராஜிவ் குமார் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ரூ. 50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்குவோரது பாஸ்போர்ட் விவரம் அவசியம். மோசடி செய்பவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க இது உதவும். ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை 45 நாட்களுக்குள் பெற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரூ. 50 கோடிக்கு மேலான வராக்கடன்களை ஆய்வு செய்யவும், அதில் மோசடி இருப்பது தெரியவந்தால் சிபிஐ வசம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதோடு ரூ.250 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களை கண்காணிக்கவும், ஒப்பந்த விதி மீறல் இருந்தால் உடனடியாக அதை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.