சென்னை
நேற்று சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானத்தில் திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தவிக்கும் நிலை உண்டானது.
நேற்று காலை 11.30 மணிக்குச் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உட்பட 142 பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர்.
இந்த விமானம் ஓடுபாதை நோக்கி செல்லும் போது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்து விமானத்தை அவசரமாக நிறுத்தி விட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். விமானம் இழுவை வண்டி மூலமாக நடைமேடைக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அதிகாரிகள் விமானம் தாமதமாக செல்லும் என அறிவித்தனர். பொறியாளர்கள் குழுவினர் விமானத்தைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆயினும் விமானம் உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்பட 38 பயணிகள் விமானத்தில் பயணிக்க விரும்பவில்லை என்று கூறி தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு இறங்கி மதுரைக்கு சென்ற வேறு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
அவ்வாறு செய்யாத 104 பயணிகள் தவித்துக் கொண்டு இருந்தனர். விமானம் சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் மாலை 4:30 மணிக்கு 104 பயணிகளுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது.