மும்பை
நிரந்தர வேலை கோரி ஆயிரக்கணக்கான பயிற்சி மாணவர்கள் தீடிரென மும்பை ரெயில் தடத்தில் மறியல் செய்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
எப்போதும் பரபரப்பாக உள்ள மும்பையில் காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்களாலும் மாணவ மாணவிகளாலும் மேலும் பரபரப்பாக காணப்படும். இவர்கள் பொதுவாக பேருந்தை விட ரெயிலில் அதிகம் பயணம் செய்வது வழக்கம். இதனால் காலையிலும் மாலையிலும் ரெயிலில் கால்வைக்கவே இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் காணப்படும்.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள மாதுங்கா- தாதர் இடையிலான ரெயில் தடத்தில் ஆயிரக்கணக்கான பயிற்சி மாணவர்கள் ரெயில் மறியல் செய்தனர். ரெயில்வேயில் பயிற்சி பெறும் தங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கக் கோரி இந்த மறியலை தொடங்கினர். முதலில் சுமார் 500 பயிற்சியாளர்கள் மட்டும் இருந்த நிலையில் சிறிது சிறிதாக எண்ணிக்கை அதிகரித்து இந்த தடத்தில் உள்ள நான்கு ரெயில்வே பாதைகளிலும் மறியல் செய்தனர்.
இதனால் ரெயில் போக்குவரத்து முழுமையாக நின்று போனது. தினமும் ரெயிலில் பயணம் செய்யும் சுமார் 5 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வெளியூரில் இருந்து வந்த ரெயில்களும் ஆங்காங்கே நின்றதால் மேலும் பதட்டம் உண்டாகியது. ரெயில்வே அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் ஏதும் உபயோகம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதையொட்டி காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். ஆனால் மாணவர்கள் பதிலுக்கு கல்லடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு இந்த விவரம் அறிந்த ரெயில்வே அமைச்சர் இது குறித்து தாமே நேரில் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்ததை ஒட்டி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.