சென்னை
பெங்களூருவில் இருந்து வரும் சசிகலாவை வரவேற்கக் கூடும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி தற்போது பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சென்னை வருவதையொட்டி வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தினகரன், “கட்சித் தொண்டர்கள் சசிகலாவை வரவேற்கத் தொண்டர்கள் தயாராகி வருவது, அதிகாரத்தில் இருக்கும் சிலரைப் பதற்றமடைய வைத்துள்ளது.. இவர்கள் தமிழக டிஜிபி-யிடம் தொடர்ந்து புகார் அளிப்பதைப் பார்த்தால், சதித்திட்டம் தீட்டி, தொண்டர்கள் மீது பழிபோட முயற்சி செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகின்றது
ஆகவே சசிகலாவை வரவேற்கக் கூடும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். சசிகலா வருகைக்காக வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதால், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.