சென்னை: தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பமாக உள்ளதாகவும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாகவும்  விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் 68-வது பிறந்தநாள் இன்று தேமுதிகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக தனது விட்டில் குடும்பத்தினருன் விஜயகாந்த் பிற்நத நாளை செல்பி எடுத்து கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து,  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லம் முன் கூடியிருந்த தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   கொரோனா பரவல் காரணமாக கேப்டன் விஜயகாந்த்  யாரையும் சந்திக்கவில்லை என்று கூறியவர், விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருக்க வேண்டும் என்பது தேமுதிக தொண்டர்களின் எண்ணம், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தேமுதிக முழு வீச்சில் தயாராகி வருவதாக தெரிவித்தார்.

தேமுதிக கட்சி  தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடருவதாகக் கூறியவர், எதிர்காலத்தில் கூட்டணி தொடருமா? கட்சியின் நிலை என்ன என்பதை,  நேரம் வரும்போது தெரிவிப்போம் என்றார்.

கட்சியின் தொண்டர்களில், தேர்தலில், தனித்து போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக கூறியவர் அதுகுறித்து பொதுக்குழுவில் கலந்து ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாகவும், கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும், அதுகுறித்து,  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உரிய நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்றார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்க, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினை அவர்களது உட்கட்சி விவகாரம, அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச்சென்றது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றிய கேள்விக்கு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்றார்.

அதுபோல, தேசிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு,  தமிழ் மொழியே நம் உயிர் என்று கூறியவர், பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும், மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவர்களின் வீடுகளில் உள்ள பிள்ளைகள் தமிழ் மட்டும் தான் பேசுகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

எஸ்.வி.சேகரின் தேசியக் கொடியை அவமதிப்பு விவகாரம் குறித்த கேள்விக்கு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, அது அவருக்கே  ரஜினிக்கே தெரியாத நிலையில், தமக்கு எவ்வாறு தெரியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர்,  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.