பனாஜி:

தேவைப்பட்டால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிபோம் என்று துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வயிறு வலி காரணமாக 15ம் தேதி கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு கணைய புற்று நோய் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், கணைய புற்றுநோய் இல்லை என்று தெரிவித்த மருத்துவ நிர்வாகம் என்ன வகையான நோய் என்பதை தெளிவுபடுத்தவில்லை. எனினும் கணையம் தொடர்பான நோய் என்பது உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோகர் பாரிக்கரை பிரதமர் மோடி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் கோவா துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறுகையில், ‘‘அவர் எங்களுக்கு வேண்டும். அவருக்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். தேவைப்பட்டால் அமெரிக்காவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் தயாராகவுள்ளோம்’’ என்றார்.

முதலில் மும்பை மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது பொய் தகவல் என்று மருத்துவமனை தலைமை மருத்துவர் மறுத்தார்.

இதற்கிடையில் மனோகர் பாரிக்கர் உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பாஜக பிரமுகர் சுனில் தேசாய் என்பவர் போன்டா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். சமூக வலை தளங்களிலும் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்த தகவல்கள் பரவி வருகிறது.