சென்னை,

ருத்துவமனையில் உடல்நலமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில்  வந்த  சசிகலா, பரோல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை பெங்களூர் சிறை நோக்கி புறப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதையடுத்து, சசிகலா கணவரை காண விரும்புவதாக பெங்களூரு சிறைத்துறைக்கு15 நாள் பரோல் கேட்டு மனு கொடுத்தார். ஆனால்  அவருக்கு 5 நாள் மட்டுமே பரோல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கணவர் நடராஜனை கவனித்துக் கொள்வதற்காக சசிகலா கடந்த 6-ம் தேதி பிற்பகல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கியப்படி, தனது கணவர் நடராஜனை மருத்துவமனை யில் அவ்வப்போது  சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.

ஆனால், 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா தினசரி மருத்துவமனைக்கு சென்று சில நிமிடங்கள் மட்டுமே கணவரை கவனித்து வந்தார். மற்ற நேரங்களில், குடும்பத்தினருடனேயே ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நேற்றுடன் (அக்.11) முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை  சென்னையிலிருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்தியச் சிறைக்கு புறப்பட்டுச் சென்றார்.