டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக மக்களவைச் செயலகம் அறிவித்து உள்ளது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது. நிகழாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனவரி 31-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் இணைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இரண்டு அமர்வுகளாக நடைபெறும் கூட்டத்தொடரானது பிப்ரவரி 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மார்ச் 14-ம் தேதி கூடுகிறது.

முதல் அமர்வில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. முதல் அமர்வு காலத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரமடைந்திருப்பதால், இடையில் சில நாட்கள் அமர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. அதையடுத்து, தேர்தல் முடிவடைந்ததும், பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதையொட்டி, நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை  நடைபெற்று வருகிறது.  இதில், மாநிலங்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்கள், மக்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 200 ஊழியர்கள், மற்ற பிரிவுகளில் பணியாற்றும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.