புதுடெல்லி: வணிக காரணங்களை முன்வைத்து, இந்துத்துவ வலதுசாரிகளின் வன்முறை கருத்துகளின் மீது, முகநூல் நிறுவன உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தார் என்று பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைக்குழுவின் தற்போதைய தலைவராக இருப்பவர் காங்கிரசின் சசிதரூர்.
முகநூல் நிறுவனத்தில், இந்தியா, தெற்கு & மத்திய ஆசிய பகுதிகளுக்கான கண்காணிப்பு உயர்அதிகாரியாக பதவி வகிப்பவர் அன்கி தாஸ். இவர், இந்தியாவின் சந்தை வளத்தை காரணம் காட்டி, தெலுங்கானாவின் பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் உள்ளிட்ட வேறுசில இந்துத்துவ வலதுசாரிகளின் வன்முறையைத் தூண்டும் கருத்துகளின் மீது, நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தார் என்று அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்த விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, சசிதரூர் தலைமையில் செயல்படும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.