டெல்லி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தலைநகர் வட்டாரத் தகவல்கள் உலா வருகின்றன.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியதால்,  பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. அதன்பிறகு பாராளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழக்கமாக  நடைபெறும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் இதுவரை கூட்டப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை எப்போது தொடங்குவது என்று அறிவிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக கடந்த மாதம்  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, காணொளி காட்சி மூலம் நடத்தலாமா? பாராளுமன்ற அவையில் சமூக இடைவெளி யுடன் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர்.

அதையடுத்து, பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக  இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில்,   மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், கூட்டத்தொடர்  எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதே வேளையில், பாராளுமன்றத்தின் இரு கூட்டத்தொடர்களுக்கு இடையில் 6 மாதங்களுக்கும் மேலாக இடைவெளி இருக்க முடியாது என்பதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 22ந் தேதிக்கு முன்பு நடத்தப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.