சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. தேர்தலில்  20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக ஸ்டாலின் கூறினார்.

அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.  இநத் கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு இடமும், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடமும், மதிமுகவுக்கு ஒரு இடமும்  ஒதுக்கப்பட்டது.

இதன் காரணமாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை. அதுபோல, மனித நேய மக்கள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.