சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக தோல்வி அடைந்ததால், அக்கட்சி தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்துள்ளது. இது கட்சிக்குள்ளும், கட்சி தலைமையின் குடும்பத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18வது மக்களவைக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவியது. இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் நின்றனர். ஆனால், திமுக கூட்டணி மொத்தமாக 39 தொகுதிகளையும் வென்ற நிலையில் மற்ற கட்சிகள் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்து, 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., கடந்த தேர்தலைவிட குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, ஆறு தொகுதி களில் டெபாசிட்டையும் பறிகொடுத்திருக்கிறது. இதனால், பாமக மாநிலக் கட்சி அங்கீகாரத்தை பெற முடியாமல், உள்ளது. இந்த தேர்தலில், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என இறுதிவரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மேலும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார்.
இருந்தாலும் தேர்தல் முடிவு பாமகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட பாமகவின் 10 வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி, 10 தொகுதிகளிலும் 18.79 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றனர். குறிப்பாக, 6 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தனர். இதனால், பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது. அதாவது, இந்த தேர்தலில் 4.23% வாக்குமட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்தபோது, இரட்டை இலை வாக்குகள் எங்களுக்கும் எங்களுடைய வாக்குகள் அ.தி.மு.க-வுக்கும் கைகொடுத்தன. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் இரண்டாமிடத்தையும், எட்டு தொகுதிகளில் மூன்றாமிடத்தையும், கள்ளக்குறிச்சி தொகுதியில் நான்காமிடத்தையும் பெற்றிருக்கிறது பா.ம.க. மேலும், போட்டியிட்ட தொகுதிகளில், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய ஆறு தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறது.
வன்னியர் சங்கம் பாமகவாக மாற்றப்பட்ட 1989ம் ஆண்டு முதல் இதுவரை 7 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 2004ம் ஆண்டு நடந்த 14வது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இதன் காரணமாக அப்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் 6.71 ஆக இருந்தது.
அதன் பின்னர் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்வியை மட்டுமே பாமக சந்தித்து வருகின்றன. இதேபோல், இம்முறை நடந்த தேர்தலிலும் 8 சதவீதத்தை எட்ட முடியாமலும், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்துள்ளது .
பா.ம.க. வின் இந்த “இந்த வீழ்ச்சி, பா.ம.க நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தைலாபுரத்தையும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது” என்கிறார்கள் கட்சி பிரமுகர்கள்,. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என டாக்டர் ராமதாஸ் கூறியதாகவும், அதை பாமக தலைவர் அன்புமணி ஏற்க மறுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால்தான், இந்த பெருந்தோல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க-வுடனான கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டு, சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடையில் ராமதாஸ் ஏறியபோதே, “பா.ஜ.க-வுடன் அணி சேர்ந்திருப்பதால் பா.ம.க-வுக்கு என்ன லாபம்… நமது வாக்கு சதவிகிதம் உயர வாய்ப்பில்லை. வெற்றிக்கான வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று கட்சிக்குள்ளும் தொண்டர் களிடையேயும் முணுமுணுப்புகள் எழுந்த நிலையில், அது உண்மையாகி உள்ளது. தேர்தல் தோல்வி, கட்சியின் அங்கீகாரம் இழப்பு பாமகவின் அனைத்து மட்டத்திலும் எதிரொலித்து வருகிறது. இதனால் கட்சி தலைமையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக வாக்கு 6.6 சதவீதம் சரிவு: தமிழ்நாட்டில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்…