சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வரம் 23ஆம் தேதி சென்னை வருகிறார்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்ய இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பிப்ரவரி 23ந்தேதி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள “ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகுவிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, பிப்ரவரி 24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.