டெல்லி: நாடாளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றோடு நிறைவுபெற்றது. இதையடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த முதல் அமர்வு பிப்ரவரி 11-ந் தேதியுடன் ஒத்திவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்டதால், இரு அவைகளும் வழக்கம்போல காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெற்று வந்தன. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 7ந்தேதி (இன்றோடு) நிறைவு பெற்றது. இதையடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
இதுபோல ராஜ்யசபாவும் இன்றுடன் நிறைவுபெறுவதாக சபைதலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு அறிவித்தார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த அமர்வில், ஜம்மு-காஷ்மீர் பட்ஜட்ட், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசாரமான விவாதங்தங்கள் நடைபெற்றன.